திருவாரூர்: குவைத் நாட்டிற்கு வேலைக்குச்சென்ற, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் லட்சுமாங்குடி பகுதியைச்சேர்ந்த முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலை மீட்டுத்தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மனு அளித்துள்ளனர்.
கூத்தாநல்லூர் தாலுகா, லட்சுமாங்குடி பகுதியைச்சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் தனது பிள்ளைகளின் படிப்பிற்காகவும் காய்கறி கடை நடத்தி அதில் ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்கும் வெளிநாடு செல்ல முடிவெடுத்து, ஏஜென்ட் மோகனா என்ற ஆந்திரப் பெண்ணைத்தொடர்புகொண்டு குவைத் நாட்டிற்கு செப்டம்பர் 3ஆம் தேதி சென்றார்.
அதன்பிறகு அவர் வீட்டில் தொடர்பு கொண்டு குவைத் வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு அவர் தான் எந்த வேலைக்காக அழைத்து வரப்பட்டோமோ அந்த வேலையை செய்யமுடியாமல், ஆடு, ஒட்டகம் ஆகியவற்றை மேய்த்ததாகவும் பாலைவனத்தில் அங்குள்ள குவைத் முதலாளி செய்த கொடுமைகள் குறித்தும் தனது வீட்டிலும், ஏஜென்ட் மோகனாவிடமும் தெரிவித்துள்ளார்.
மேலும் உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப வேண்டுமென கடந்த ஏழாம் தேதி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ஏழாம் தேதி இரவு அங்கு பணியாற்றும் அதே ஊரைச்சேர்ந்த நண்பர் ஒருவரிடம் அவர் அங்குள்ள துயரங்கள் குறித்து போனில் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென போனை உடைக்கும் சத்தம், அவர் நண்பருக்கு கேட்டுள்ளது.
அதன்பிறகு முத்துக்குமரனுக்கு அவருடைய நண்பர் தொடர்புகொண்டு பேச முயற்சித்தபோது, அவரை தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது குவைத் முதலாளிகள் அவரை கடுமையாகத் தாக்கி சுட்டுக்கொன்றதாகத் தெரிகிறது. அதன்பிறகு குவைத் நாட்டில் நம்பகத்தன்மை உள்ள ஊடகங்கள் துப்பாக்கியால் சுட்டு இந்தியர் உயிரிழப்பு என செய்தி வெளியிட்டது.
அதன் பிறகு 9ஆம் தேதி தான் முத்துக்குமரன் மனைவி வித்யாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரிடமிருந்து அழைப்பு வந்தபோதே மோகனா உடனடியாக சென்று அவரை மீட்டு இருந்தால், அவரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும்; ஆனால் ஏஜென்ட் மோகனா அலட்சியத்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முத்துக்குமரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். மற்றொரு மகன் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். முத்துக்குமரனும் வித்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
இந்நிலையில் முத்துக்குமரன் பிரதேத்தை உடனே மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும்; அதுமட்டுமின்றி முத்துக்குமரன் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தவர்கள் மீது குவைத் அரசு நடவடிக்கை எடுக்க இந்தியத்தூதரகம் வலியுறுத்த வேண்டும் எனவும் முத்துக்குமரனின் மனைவி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று கூத்தாநல்லூர் தாலுகா அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லியில் செல்போன் திருடிய 19 வயது இளைஞர் அடித்துக் கொலை