மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் வேளாண் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் வேலை பார்த்து வருகின்றனர். அதே நிறுவனத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயன் (23), ராகுல் டிராவிட் (20), நித்திஷ் (20), ஜெகன் (26), நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சோபன்பாபு (22), பரதன் (19) பிரபாகரன் (20) ஆகிய ஏழு பேரும் பணிபுரிந்துவருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வேளாண் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் மூடப்பட்டது.
இதனால் வேலைவாய்ப்பினை இழந்த இளைஞர்கள் உணவின்றி தவித்துவந்துள்ளனர். ரயில் மற்றும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால், கடந்த 29ஆம் தேதி நடந்தே தமிழ்நாடு நோக்கி புறப்பட்ட அந்த 7 இளைஞர்களும் வழியில் லாரிகளை மறித்து மாறி, மாறி ஏறி நேற்று திருச்சியை வந்தடைந்தனர்.
சாலையில் நடந்து வந்தபோது உடல் சோர்வடைந்து மயங்கும் நிலையில் இருந்துள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த ஓட்டுநர்கள் செந்தில் மற்றும் அருண் இருவரும் கவனித்து ஏழு பேரையும் வழிமறித்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் திருவாரூர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், என்பதும் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து நடந்தே வந்ததும் தெரியவந்தது .
இதனையடுத்து, சோர்வு நிலையில் இருந்த இளைஞர்கள் ஏழு பேரையும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று நடந்ததை ஆட்சியரிடம் தெரிவித்தனர். பின்னர் செந்தில், அருண் ஆகியோர் தன்னார்வத்துடன் தனது காரில் அழைத்துச் சென்று விடுவதற்கு வாகன பாஸ் பெற்று, தங்களது காரில் ஏழு பேரையும் ஏற்றிக்கொண்டு திருவாருர் விளமல் வாகன சோதனை சாவடி வந்தனர்.
அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரின் உதவியுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஏழு பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது, இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்து திருச்சிக்கு நடந்து வந்த இளைஞர்கள் ஏழு பேரும், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், இந்த இளைஞர்கள் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் திருச்சிக்கு நடந்தே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவல்துறைக் கட்டுப்பாட்டுக்குள் சத்தியமங்கலம்!