திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், பாரதிராஜா. இவரது வயது 25. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம், கோட்டூர் அருகே காடன்சேத்தி பகுதியைச் சேர்ந்தவர், நிஷா. அவருக்கு வயது 18. இவர் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவரும் மன்னார்குடி அருகே உள்ள பருத்திக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு வயல்காட்டில் மரத்தடியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இளம் வயதினர் இருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சடலங்களைப் பார்த்து பதற்றம் அடைந்த அவ்வழியாக சென்றவர்கள், உடனடியாக காவல்துறையினருக்கும் ஊர்ப்பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர் காவல்துறையினர் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினர் விசாரணையின்போது, இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாததால் இளம்ஜோடிகள் இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் நேற்று இரவு முதல் தங்களுடைய பெண் காணவில்லை எனக்கூறி, பெண்ணின் பெற்றோர்கள் பாரதிராஜா வீட்டில் சென்று கேட்டுள்ளனர்.
அப்பொழுது தங்களுடைய வீட்டிற்கு வரவில்லை என்றும்; தங்களது மகனும் இதுவரை வீட்டில் இல்லை எனவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் இருவரும் இன்று காலை மரத்தடியில் தூக்கில் தொங்கியபடி, இறந்து கிடந்த சம்பவம் இரு குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியினையும் வேதனையையும் ஒரு சேர தந்துள்ளது.
அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலையைக் கைவிடுக: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால், 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள்.
சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண் - 044 - 24640050
மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104
இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111
மின்னஞ்சல் - help@snehaindia.org
நேரில் தொடர்புகொள்ள - சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட்,
11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600028
இதையும் படிங்க: ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவா? - வைத்திலிங்கம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!