திருப்பத்துார் மாவட்டம் வலசை பகுதியைச் சோ்ந்தவர் சார்லஸ். இவருடைய மனைவி பொன்னம்மாள். கட்டுமானப் பணியில் கம்பி கட்டும் பணி செய்யும் சார்லஸ், குடிபோதைக்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு குடும்பச் செலவுக்குப் பணம் தர மறுத்துள்ளார்.
சார்லஸ்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதையறிந்த பொன்னம்மாள், தனது கணவரைக் கண்டித்துள்ளார், இதில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பொன்னம்மாள் நேற்று அதிகாலை 5 மணியளவில் அப்பகுதியிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் பொன்னம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், அவர் சமரசமடைந்து கீழிறங்கியுள்ளார். இதையடுத்து காவல் துறையினர் அவரை மீட்டு, பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சார்லஸிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.