திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் ஜம்மு காஷ்மீரின் கந்துவா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஜூலை 25ஆம் தேதி பணியில் இருக்கும் போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து காயமடைந்தார். இதனையடுத்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து உதாம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்ணில் பாய்ந்த துப்பாக்கி குண்டை அகற்றும் அறுவை சிகிச்சை கடந்த 27ஆம் தேதி நடந்தது.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் (ஜூலை 31) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் இன்று (ஆகஸ்ட் 2) அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளவராயன் குடிகாடு கிராமத்திற்கு ராணுவ வீரர்களால் கொண்டு வரப்பட்டது.
பின்னர் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராணுவ வாகனத்தில் மரியாதையுடன் அவரது உடல் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கடலூரில் கலவரம்: முன்னாள் தலைவர் தம்பி வெட்டிக் கொலை... வீடுகள், படகுகளுக்கு தீ வைப்பு!