திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அடுத்துள்ள வில்லூர் கிராமத்தில் தனது குடும்ப நிகழ்ச்சியில் பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருக்கின்ற இரட்டை நிலைப்பாடு இந்து விரோதம் போன்றவை தமிழ்நாட்டு மக்களிடையே புரியவைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பெண்கள் இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகளே நேரடியாகப் பொதுமக்களுக்கு காய்கறி உள்ளிட்டவைகளை விற்றதன் மூலம்தான் வேளாண் துறையில் ஜிடிபி 7 விழுக்காடு உயர்ந்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு எதிரானது இல்லை.
உண்மையான விவசாயிகளாக இருந்தால் இச்சட்டத்தை எதிர்க்க மாட்டார்கள். ரஜினிகாந்தை பாஜக இயக்குகிறது என்பது கற்பனையானது. பாஜகவோ ரஜினிகாந்தோ இதனைத் தெரிவிக்கவில்லை. கூட்டணி குறித்து பாஜக மேலிடத் தலைவர்கள்தான் முடிவுசெய்வார்கள்" என்றார்.
பாஜகவையும் அதிமுகவையும் விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என டி.ஆர். பாலு தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் அளித்த ராஜா, 'திமுக, டெல்டா விவசாயிகளின் எதிரி. காவிரிப் பிரச்சினையில் ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது திமுகதான்' எனக் கூறினார்.
இறுதியாக, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களை அழிக்க முயற்சி நடப்பதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ள கருத்திற்குப் பதிலளித்த அவர், திமுகவை மு.க. ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார். இதைத்தான் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி திராவிட இயக்கங்களை அழிக்க தமிழ்நாட்டில் முயற்சி நடப்பதாக தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
இதையும் படிங்க: நேற்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்: இன்று ‘டெண்டர் பழனிசாமி’ என்று ஸ்டாலின் விமர்சனம்!