உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மார்க்கெட் கடை வீதிகளிலும், பேருந்து நிலையங்களிலும், மக்கள் கூட்டம் வந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், கிராமப்புற மக்களுக்கு சரியான விழிப்புணர்வு கொடுக்கவில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இன்று திருவாரூர் கடைத்தெருவில் வணிக வளாகங்கள், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது கடை உரிமையாளர்களுக்கு, கிருமி நாசினி தெளிக்க வேண்டும், கடையில் பணியாற்றுபவர்கள் முகமூடி அணிய வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார். மேலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார ஊழியர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று, அவர்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட பார்: சீல் வைத்த கலால் துறையினர்