தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஏழு உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்குமாறு மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளதாக அண்மையில் அறிவித்தார்.
இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய வெள்ளாளர் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (டிச.9) திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி வருகை தர இருக்கிறார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அகில இந்தியவேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்புசார்பில் 300க்கும் மேற்பட்டோர் திடீரென கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தங்கள் சமூக பெயரை மாற்று சமூகத்திற்கு தாரைவாக்க நினைக்கும் முதலமைச்சரை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்தச் சாலை மறியலில் காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையை தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அருகிலிருந்த தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் திருச்சி - வேளாங்கண்ணி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.