தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.காமராஜ் வாகனத்திலிருந்து 285 பரிசு பெட்டகமும், பரிசுப்பொருளாக குங்கும சிமிழும் இருந்துள்ளன. இதனையடுத்து பொருட்கள் கைப்பற்றப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அமமுக வேட்பாளர் மீது காவல்துறை வழக்குப்பதிவும் செய்தனர்.
இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பி.காமராஜ், அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் கொடுக்க முயன்றுள்ளார்.
எனவே அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாசிடம் மனு அளித்தார்.