திருவாரூர்: மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான சாந்தா தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அரசியல் கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் சாந்தா கூறுகையில், ’திருவாரூர் மாவட்டம் முழுவதும் 10 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். தற்சமயம் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு மூன்று பறக்கும் படையினர், ஒரு கேமரா குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு பிறகு ஒவ்வொரு தொகுதிக்கும் சுழற்சி முறையில் 3 பறக்கும் படை முறையே ஒன்பது பறக்கும் படையினர் அமைக்கப்படும். அவர்களோடு கேமரா குழுவினரும் பணியாற்றுவார்கள்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை ஏற்று கூடுதலாக பறக்கும் படைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். பறக்கும் படைகள் கண்காணிக்கவும், தொலைக்காட்சி, செய்தித்தாள் விளம்பரங்களை கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளது. மாவட்டம் முழுவதும் 243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுக்கு தனியாக கேமரா குழுவினரும் ஒரு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பணியாற்றுவார்கள்.
எதிர் வரும் தேர்தலுக்காக திருவாரூர் மாவட்டத்திற்கு 91 ராணுவ வீரர்கள் கொண்ட துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 2000 அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நாளன்று 6000 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டம் முழுவதும் 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது. அதில் இரண்டு மாநில சோதனைச் சாவடிகள் உள்ளன.
கரோனா காரணமாக வாக்குச்சாவடி மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன அதன்படி, ஏற்கனவே கடந்த தேர்தல்களில் 1168 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 286 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 1454 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
ஏற்கனவே 300 வருவாய் துறையினருக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.
இதையும் படிங்க:விஸ்வகர்மா சமூகம் அதிமுகவுக்கு ஆதரவு- கரூரில் கூட்டமைப்பு தலைவர் பேட்டி