திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருவாரூரில் 150 வாக்குச்சாவடி மையங்கள், மன்னார்குடியில் 213 வாக்குச்சாவடி மையங்கள், கோட்டூரில் 201 வாக்குச்சாவடி மையங்கள், திருத்துறைப்பூண்டியில் 143 வாக்குச்சாவடி மையங்கள், முத்துப்பேட்டையில் 131 வாக்குச்சாவடி மையங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 838 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இதில், திருவாரூரில் 17 வாக்குச்சாவடிகள், மன்னார்குடியில் 27 வாக்குச்சாவடிகள், கோட்டூரில் 25 வாக்குச்சாவடிகள், திருத்துறைப்பூண்டியில் 13 வாக்குச்சாவடிகள், முத்துப்பேட்டையில் 9 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு 1,675 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவாரூரில் 77 ஆயிரத்து 192 பேரும், மன்னார்குடியில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 77 பேரும், கோட்டூரில் 84 ஆயிரத்து 634 பேரும், திருத்துறைப்பூண்டியில் 69 ஆயிரத்து 181 பேரும், முத்துப்பேட்டையில் 64 ஆயிரத்து 833 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கின்றனர். காலையிலிருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.
வாக்களிக்க வந்த மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ”மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காததால் சிலர் பணிக்குச் சென்றுவிட்டனர். இக்காரணங்களால் வாக்குப்பதிவில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. விடுமுறை இல்லாத காரணத்தால் அதிகாலையே வந்து காத்திருந்து வாக்கு செலுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது” என்று வருத்தம் தெரிவித்தார்.