திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோன்று வருங்கால வைப்பு நிதிக்கு(pf) பிடித்தம் செய்யப்பட்ட பணம் முறையாக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
கோவிட் -19 வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே, மருத்துவமனையில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டும் முகக் கவசம் வழங்கியதால் ஒப்பந்த தொழிலாளர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது போன்ற நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தனியார் தொழிலாளர்கள் திடீரென அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் அருகே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த திடீர் போராட்டத்தால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதார பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பிலிப்பைன்சில் இருக்கும் இந்திய மாணாக்கரை தாயகம் அழைத்துவர கோரிக்கை