திருவாரூர் மாவட்டம் அலிவலம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருள்கள் வழங்குவதை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 - கிலோ வீதம் 5.3 லட்சம் மெட்ரிக் டன் அரிசியைப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தமிழ்நாடு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக 432 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து, 22 ரூபாய்க்கு மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியைக் கொள்முதல் செய்து அனைவருக்கும் இரண்டு மடங்காக வழங்கி வருகிறது.
விவசாயப் பணிகளுக்கு முழு தளர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 31 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா தாக்கத்தின் காரணமாக மே மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இரண்டு நாள்களில் மட்டும் 30 விழுக்காடு வழங்கப்பட்டுள்ளன.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தனிக்குழுக்கள் அமைத்து, அக்குழுக்களின் ஆலோசனையைப் பெற்று அதன்படி அரசு செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள் திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க:கரோனா நிவாரணம் வாங்காதவர்கள் இம்மாதம் வாங்கிக்கொள்ளலாம் - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்