தமிழ்நாடு அரசு மேல்நிலை கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு நிதி உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், குடவாசல், நன்னிலம் ஆகிய வட்டத்துக்கு உட்பட்ட 41 பள்ளிகளைச் சேர்ந்த 5208 மாணவ மாணவிகளுக்கு 2 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் காமராஜ் பேசுகையில், "திருவாரூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகளுக்கான பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் தமிழ்நாடு அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்படும். "ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டம் தமிழ்நாட்டில் நாளை செயல்படுத்தப்பட உள்ளது. அதனடிப்படையில், முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்படுகிறது.
இதில் ஏற்படும் நிறை குறைகளை ஆய்வு செய்து பிற மாவட்டங்களிலும் பரவலாக கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:
சிறைச் சாலையிலேயே கையூட்டு, ஊழல்: சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் வேதனை