திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மஞ்சக்குடி தனியார் கல்லூரியில் வருவாய் மற்றும் மேலாண்மை பேரிடர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கூடுதல் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 1,116 முதியோர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்கள் அமைச்சர் காமராஜிடம் சில கேள்விகள் எழுப்பினர். உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என முதலமைச்சர் கூறியதற்கு,’ எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என ஸ்டாலின் பதிலளித்துள்ளாரே?
“அரசியலில் முதிர்ச்சி வேண்டும். ஆனால் இந்தப் பதில் ஸ்டாலினுக்கு முதிர்ச்சி இல்லாததைக் காட்டுகிறது. இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டில் கிராமப்புற மற்றும் நகர்புற அரசு பள்ளிகளில் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு அமைச்சர்களின் குழுக்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்த விவகாரத்தை விரைவில் முடித்து தருவதாக ஆளுநர் கூறியுள்ளார். இந்நேரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார். இதில் அரசியல் செய்யக்கூடாது என்றுதான் முதலமைச்சர் தெரிவித்தார்” என அமைச்சர் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இந்தாண்டு காரிப் சீசனில் இதுவரை மூன்று லட்சம் மெட்ரிக் டன் அதாவது 75 -லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது குறுவை சாகுபடியில் வரலாற்று சாதனையாக இருந்துவருகிறது.
மத்திய அரசின் ஆய்வுக்குழு நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. நெற்பயிர்கள் ஈரப்பதத்தை 17விழுக்காடிலிருந்து 22விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறியதால், ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய குழு கமிட்டி வந்துள்ளார்கள். விவசாயிகளுக்கு நல்ல முடிவை கொடுப்பார்கள் என எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றோம்”என்றார்.
இதையும் படிங்க:எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? - மு.க.ஸ்டாலின்