திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் நான்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. நகர வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது போல் கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், இதனை தடுக்கும் விதமாக மாநில அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.
மேலும் குறுவை சம்பா சாகுபடி பணியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து புதிய தண்ணீரை காவிரியில் பெற்று தந்து குறுவை பயிரை காப்பாற்றவும் சம்பா சாகுபடியை விவசாயிகள் துவங்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் தமிழ்நாடு அரசு தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பேங்க் போகாமல் அக்கவுண்ட் ஓபன் பண்ணனுமா? - அப்போது இது உங்களுக்கான செய்திதான்!