திருவாரூர் மாவட்டம் புலிவலம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இலவச பாடப்புத்தகங்களை இன்று (ஜூலை 16) வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திருவாரூர் மாவட்டத்தில் 99 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 99 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படிக்கும் மொத்தம் 11 ஆயிரத்து 553 மாணவ, மாணவிகளுக்கு 1 கோடியே 6 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
அதேபோல 173 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படிக்கும் 13 ஆயிரத்து 50 மாணவ, மாணவிகளுக்கு 1 கோடியே 3 லட்சத்து 9 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. அதன் தொடக்கமாக இன்று புலிவலம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு மக்களின் தேவைகளுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான தண்ணீர் திறப்பு குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முதலமைச்சர் வலியுறுத்திவருகிறார். விரைவில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கூட்டுறவு நகைக் கடன் உள்ளிட்ட எந்தக் கடனும் நிறுத்தப்படமாட்டாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே விவசாயிகள் தவறான தகவலை நம்ப வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு காவல் துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையானது' - அமைச்சர் காமராஜ்