காவிரி டெல்டாவான திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1.20 லட்சம் ஏக்கரில், சம்பா தாளடி பணிகளில் உழவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நன்னிலம், திருத்துறைபூண்டி உள்ளிட்டப் பகுதிகளில் 80% நேரடி நெல் விதைப்பு சம்பா சாகுபடி நடந்து வருகிறது. தற்போது, பயிர்கள் வளர்ந்து களைக்கொல்லி தெளிக்கும் பருவம் வந்த நிலையில், அதன் வீரியக் குறைவால் பூச்சிகளும், களைகளும் வயலிலேயே தங்கி விடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் உழவர்கள்.
பூச்சிக்கொல்லிகளின் விலை குறைவால் அதன் வீரியமும் குறைந்து காணப்படுவதாக கூறும் உழவர்கள், சென்றாண்டு அடோரா பூச்சிக்கொல்லி மருந்து ஒரு லிட்டரின் விலை ரூ.6,000 ஆக இருந்த நிலையில், தற்போது அதன் விலை ரூ.4,000 ஆக இருக்கிறது என்றும், அதேபோல ரூ.5600 க்கு விற்கப்பட்ட மற்றொரு பூச்சிக்கொல்லி மருந்தான நாமின்கோல்டு, ரூ.3,500 க்கு விற்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
வீரியக்குறைவால் பூச்சிக்கொல்லிகளை வயலில் தெளிக்கும் போது பூச்சிகள் அழியாமல், இரண்டு மூன்று முறை தெளித்தாலும் கூட களைகள் வயலிலேயே தேங்கி விடுவதால், பெரும் இழப்பு ஏற்படுவதாக உழவர்கள் கூறுகின்றனர். இதனால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், எனவே பூச்சிக்கொல்லி மருந்துகளை அரசு மறு ஆய்வு செய்து, அடுத்த ஆண்டாவது தரமானதாக வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 234 தொகுதிகளிலும் போட்டி: இளைஞர் கட்சி அறிவிப்பு