திருவாரூர்: பயிர் காப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் பழைய முறையை நடைமுறைபடுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும், இந்தாண்டு சுமார் 3.78 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுவந்தனர். இவ்வேளையில், விவசாயிகள் கிராம கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடைந்து வந்த நிலையில், மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், விவசாயிகள் அனைவரும் மத்திய அரசின் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் காப்பீடு செய்து, நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இச்சூழலில் விவசாயிகளும் மத்திய கூட்டுறவு சங்கங்கத்தில் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
ஆனால் காப்பீடு செய்து 15 நாள்களுக்கு மேலாகியும், இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து கூறிய விவசாயிகள், “இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் அனைவரும் சம்பா பயிரிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பேரிடர், வெள்ள பாதிப்புகளிருந்து பயிர்களுக்கு காப்பீடு செய்யும் வழக்கத்தின் படி, இந்த ஆண்டும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
ஆனால், மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் நேரடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என அறிவித்திருந்தது. அதனை நம்பி விவசாயிகளும் கிராம கூட்டுறவு வங்கியின் மூலம் பணம் செலுத்தி, அவற்றை கிராம கூட்டுறவு அலுவலகர்கள் நேரடியாக மத்திய கூட்டுறவு வங்கிகளில் இணையம் மூலம் பதிவுசெய்து வருகின்றனர்.
தற்போது, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து 15 நாள்களை கடந்தும், இன்று வரை விவசாயிகளுக்கு பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படாததால், சம்பா பயிர்களுக்கு உரம் தெளித்தல், களை எடுத்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்கு கடன் பெற்று செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பல சிறுகுறு விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இணையத்தில் எப்படி பதிவு செய்வது என்று தெரியாமல் தவித்து வரும் நிலையில் பயிர் காப்பீடு கட்டுவதற்கு கடைசி நாளான நவம்பர் 30 என்ற கால அவகாசத்தை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு கிராம கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் கடன் பெறும் பழைய முறையை நடைமுறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.