திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேவுள்ள குருங்குளம் கிராமத்தில் கடந்த ஜந்து வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட இரட்டை மின் கம்பங்கள் தற்போதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இரட்டை மின் கம்பங்களில் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்து வருகிறது. வாய்க்காலின் ஓரமாக சாய்ந்து நிற்பதால் இரட்டை மின் கம்பத்தின் வழியாக செல்லக்கூடிய 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களின் கம்பிகள் அனைத்தும் விளைநிலங்கள் வழியாக தாழ்வாக செல்கிறது.
இதனால், விவசாய பணி மேற்கொள்ளும்போது டிராக்டர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அறுவடை நேரத்தில் அறுவடை இயந்திரம் செல்வதற்குத் தடையாக மின் கம்பிகள் உள்ளது. இதனால், தாங்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பல முறை பேரளம் மின்சாரவாரிய அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், தங்களது சிரமத்தை புரிந்துகொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை: இனிப்பு வழங்கி கொண்டாடிய புதுச்சேரி முதலமைச்சர்