திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சாயத்து குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளன.
பல்வேறு குளங்கள் அரசியல் கட்சிப் பிரமுகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயத்திற்காக முறையாக தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் பேசுகையில், 'நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பஞ்சாயத்துக்குச் சொந்தமான குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் பல குளங்கள் மறைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குடிமராமத்துப் பணியின்போது குளங்கள் அனைத்தையும், அந்தந்த பகுதி விவசாயிகள், பொது மக்கள் தூர்வாரிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் பிரமுகர்களின் ஆக்கிரமிப்பினால், பல குளங்கள் முறையாக தூர்வாரப்படாமல், மணல் அள்ளும் பணியே நடைபெற்றது.
இதனால் பேரளம், ஆண்டிபந்தல், மூங்கில்குடி, திருக்கொட்டாரம், கமுகக்குடி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து குளங்கள் தூர் வாரப்படாமல் வயல்வெளி போல காட்சியளிக்கின்றன.
இதனால் தண்ணீர் தேங்காத நிலை உருவாகி, நிலத்தடி நீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும். இதனால் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களையும் கணக்கெடுப்பு நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாகத் தூர்வார வேண்டும்' என்றனர்.
இதையும் படிங்க : மேட்டூர் அணை திறப்பு: மலர்த் தூவி வரவேற்றார் ஸ்டாலின்