மேட்டூர் அணை பாசனம் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதிமுதல் ஜனவரி 28ஆம் தேதிவரை காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 'ஏ' சேனல், 'பி' சேனல் வாய்க்கால்கள், சரியாகld தூர்வாரப்படாததாலும் குடிமராமத்துப் பணிகள் காரணமாகவும் மேட்டூர் அணையிலிருந்து நீர் வரவில்லை என்று உழவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகப் பேசிய உழவர்கள், "மேட்டூர் அணை தற்போது 100 கன அடி தண்ணீரை எட்டியுள்ளதால் வரும் ஜூன் 12ஆம் தேதி கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிடுவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஆனால் கடந்த ஆண்டு குடிமராமத்து என்ற பெயரில் கண்ணுக்குத் தெரிந்த வரையில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களை மட்டுமே தூர்வாரினர்.
பல்வேறு இடங்களில் ஏ சேனல், பி சேனல் அதன் கிளை வாய்க்கால்கள் சரியாகத் தூர்வாரப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டு வேளாண்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த ஆண்டாவது ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னரே அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். மே 2ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சராக யார் பொறுப்பேற்றாலும் குடிமராமத்துப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.