திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் பகுதியைச் சேர்ந்தவர் நாடிமுத்து (75). இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு இரண்டு மகன்களும், மூன்று பெண்களும் உள்ளனர். நாடிமுத்துவின் பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில், நாடிமுத்துவும், சந்திராவும் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை நாடிமுத்து அவருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, வயல் வழியாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பி நாடிமுத்து மீது அறுந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கொரடாச்சேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக திருவாரூர் மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மின்சார கம்பி சேதமடைந்த நிலையில் உள்ளதாக பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய ஊழியர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: 330 அடி உயரம்: கயிறு அறுந்து கீழே விழுந்த இளைஞர்!