திருவாரூர்: நன்னிலம் அருகேயுள்ளது கடகம் கிராமம். இக்கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு, அப்பகுதியில் ஓடும் நாட்டாறைக் கடந்து வரவேண்டியுள்ளது.
இந்த ஆற்றின் குறுக்கே உள்ள மூங்கில் பாலம்தான் அப்பகுதியினர் ஆற்றைக் கடக்க இருந்த ஒரே வழி. அண்மையில் அந்தப் பாலமும் மிக மோசமடைந்ததால் மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வந்தனர். ஆற்றில் தண்ணீர் வராத காலங்களில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி வருகிறார்கள்.
ஈடிவி பாரத்தால் உருவான புதிய பாலம்
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்னையோடு போராடி வரும் கடக கிராமவாசிகள், அரசு அலுவலர்கள் தொடங்கி முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் வரை மனு அளித்துள்ளனர். சொல்லிக் கொள்ளும்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், கடகம் கிராமத்தினரின் அடிப்படை தேவைகளில் ஒன்றான ’பாலம்’ குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 21ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதனையறிந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உதுமான், ஊராட்சி நிதியில் இருந்து கிராம மக்களுக்கு மரப்பாலம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
கடகம் கிராமத்தினர் மகிழ்ச்சி
ஆபத்தான முறையில் பயணித்த தங்களுக்கு பாதுகாப்பான வழியை ஏற்படுத்திக் கொடுக்க காரணமாக இருந்த ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அப்பகுதியினர் மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பயன்பாட்டிலிருந்த ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்த பாஜக - வெளிக்கொணர்ந்த ஈடிவி பாரத் செய்தியாளர் மீது வழக்கு!