திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி திருவாரூர் வாளவாய்க்கால் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "மறைந்த முன்னாள் முதல்மைச்சர் திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த தொகுதியில் நாங்கள் ஓட்டு கேட்டு தான் வெற்றிபெற வேண்டும் என்ற நிலை இல்லலை. நாங்கள் பெயருக்காகவே வாக்கு சேகரிக்கிறோம்.
தமிழ்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சி மக்களுக்கு எதிரான, தமிழருக்கு எதிரான, சுயமரியாதைக்கு எதிரான, தமிழ் மண்ணுக்கு எதிரான ஆட்சியாக நடந்துவருகிறது. தமிழ்நாட்டை டெல்லியில் அடகு வைத்த மத்திய பாஜகவின் பினாமியாக அதிமுக செயல்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி 7,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். அதேபோல திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் விவசாயக் கடன், கல்விக்கடன் ரத்து போன்றவைகள் அமல்படுத்தப்படும்.
கரோனா காலகட்டத்தில் ரூபாய் 5000 நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதில் 1000-ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள 4000-ரூபாய் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கருணாநிதியின் பிறந்த நாளன்று வழங்கப்படும்.
நெல் குவிண்டாலுக்கு 2500 வழங்கப்படும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக பெற்று தரப்படும். பேப்பரில் மட்டுமே அதிமுக அரசால் வாய்க்கால் குளம் தூர்வாரப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளுக்கு நீராதாரங்கள் மேம்படுத்தப்படும், திருவாரூரில் அரசு இசை கல்லூரி அமைக்கப்படும்.
அதேபோல், டெல்டா மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டை போக்க பிரமாண்ட உரக்கிடங்கு அமைக்கப்படும். பாமிணியில் செயல்பட்டுவரும் உரத்தொழிற்சாலை மேம்படுத்தி நவீன மயமாக்கப்படும்" என வாக்குறுதி அளித்தார்.