17ஆவது மக்களவைத் தேர்தல், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பூண்டி கலைவாணன் 64 ஆயிரத்து 571 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதனையடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பூண்டி கலைவாணனுக்கு திருவாரூர் சட்டப்பேரவை தேர்தல் அலுவலர் முருகதாஸ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
கருணாநிதி மீது உள்ள பற்று காரணமாகவே இந்த வெற்றியை மக்கள் தந்துள்ளனர். மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தோழமைக் கட்சியினருக்கு இந்த சமயத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.
மேலும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வளர்ச்சிக்காக எந்த விலை கொடுக்கவும் தயாராக உள்ளேன். அதேபோல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.