2019-20ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை, அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை மனு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ''சம்பா தாளடி பயிர் காப்பீட்டுத் தொகை இதுவரை மன்னார்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வழங்கப்படவில்லை. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 68 கிராமங்கள் உள்ளன. இதில் குறிப்பாக மன்னார்குடியைப் பொறுத்தவரை 25 கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை. இதில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. மாவட்ட ஆட்சியரும், வேளாண் துறை அலுவலர்களும் உறுதி அளித்ததால் நான் நம்பிக்கையுடன் செல்கிறேன். விரைவில் இந்தப் பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
திமுகவிலிருந்து வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் உள்ளிட்ட தேவையற்ற பொருள்கள் வெளியில் செல்வது எங்களுக்கு நல்லது தான். இது அவர்களுக்கு தான் மிகப்பெரிய இழப்பு.
திமுக பற்றி தகுதியானவர்கள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கும்போது அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால், அர்த்தம் இருந்தால் பதில் சொல்லலாம். தேவையில்லாத விமர்சனங்களுக்கு பதில் கூறி எங்களது நேரத்தை வீணடிக்க முடியாது. எதிர்வரும் காலத்தில் திமுக தான் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஸ்டாலின் விநாயகரை வழிபட வேண்டும்’ - இந்து முன்னணி கட்சி கோரிக்கை!