தமிழ்நாடு முழுவதும் குடியரசு தினத்தன்று டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மீது காவல் துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து கைது செய்தனர்.
இதனை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவாரூர் சட்டபேரவை உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் தலைமையில் 2000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளை கைது செய்த காவல் துறையினரை கண்டித்தும், விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திமுக கழக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேடையில் பொன்முடி பேசுகையில், "அதிமுகவினருக்கு வழக்கு போடுவது என்பது கைவந்த கலையாகும். வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து விவசாயிகளும் சேர்ந்து ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பொதுச்செயலாளர் முத்தரசன், "மத்திய பாஜக அரசு ஒரு மனிதாபிமானமற்ற அரசாக செயல்பட்டு வருகிறது. கடும் குளிரிலும் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களை ஒடுக்க நினைத்தது. காவல் துறையினரை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கையில் ஆயுதம் இன்றி போராடுவதற்கு அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. அது தெரியாமல் எடப்பாடி பழனிசாமி போராடிய விவசாயிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து வருகிறார்” என்றார்.