காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதற்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு இருந்தது. மேலும், இதனை பேரவையில் சட்டமாக இயற்ற வேண்டுமென எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையையேற்று காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை முதலமைச்சர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு என்று கூறி டெல்டா விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். மேலும் இந்தச் சட்டத்தில் இனி வரக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனை வரவேற்பதாகவும், ஆனால் ஏற்கனவே இருக்கக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை எனவும், ஏற்கனவே செயல்படக்கூடிய எண்ணெய் கிணறுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
மேலும், அவ்வாறு செய்தால் மட்டுமே டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முழுமை பெறும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியன் 2 விபத்து: தொழிலாளர்களின் குடும்பத்திற்கு லைகா ரூ.2 கோடி அறிவிப்பு