திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு சரியான நேரத்தில் பெய்த பருவ மழையினால் சிறப்பான முறையில் சாகுபடி நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்வதற்கு இயந்திரம் கிடைக்காததால் நெற்பயிர்கள் முதிர்ந்து வயலில் கொட்டுவதாகவும் பத்து நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் நெற்பயிர்கள் பூஞ்சைகள் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அறுவடை இயந்திரம் கிடைத்தாலும் நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளதால் இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 3,000 முதல் 3,500 ரூபாய் வரை கேட்கிறார்கள். இதனால் ஏற்கனவே கடன் பெற்று விவசாயம் செய்துவரும் விவசாயிகள் லாபம் கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கு அரசு உத்தரவின்படி 2000 ரூபாய் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். ஆனால் ஏக்கருக்கு 3,000 ரூபாய் வரை கேட்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் இதனை கவனத்தில் கொண்டு விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 2020 பட்ஜெட் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!