திருவாரூர்: பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி கடந்த 25 ஆம் தேதி(அக்.25) கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. அங்கு நகராட்சி ஊழியர்கள் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக அடுக்கிவைத்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் அப்பகுதியை இன்று (அக்.29) ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் காயத்ரி, "கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடத்தில் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக சீரமைத்துள்ளோம். சுவர் அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுவர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலம் சாலைகளில் நீர் தேங்காத வண்ணம் தூர்வாருதல் பணி, வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரசில் இணைந்த டென்னிஸ் ஜாம்பவான்