திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சிவக்குமார், பொதுப்பணித்துறை அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது இணை இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், “சம்பா சாகுபடி பணிகள் தற்போது தொடங்கியுள்ள இந்நிலையில் சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை செலுத்துவதற்கு நவம்பர் 30ஆம் தேதி இறுதி நாள் ஆகும்.
மேலும் ஒரு ஏக்கருக்கு 488 ரூபாய் பிரீமியம் தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும்” என அறிவித்தார்.
ஏற்கனவே குறுவை சாகுபடிக்கு ஜூலை மாதம் 30ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தி வந்த நிலையில் தற்போது சம்பா சாகுபடிக்கான பிரிமியம் தொகையை செலுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து விவசாயிகள் பேசுகையில், “தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பழைய கடனை கட்டினால்தான் புதிய கடன்கள் வழங்கப்படும் என வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கரோனா தொற்றின் காரணமாக விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், நிபந்தனையின்றி புதிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேளாண் கிடங்குகளில் விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப விதைகள் வழங்கப்பட வேண்டும், நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்” என்றனர்.