திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் பயின்றுவருகின்றனர். ஆண்டிற்கு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டு பருவத் தேர்வுகள் நடைபெறும். தற்போது ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தலின்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக அனைத்துத் துறை இறுதியாண்டு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்திமுடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக பருவத் தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய பல்கலைக்கழகப் பதிவாளர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.