திருவாரூர் : தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மன்னார்குடியில் இன்று (அக்.19) பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலன்களுக்கு எதிரானது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான இச்சட்டத்தால் இந்தியாவில் வாழக்கூடிய 80 விழுக்காடு சிறு,குறு விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறக் கூடிய அவலநிலை ஏற்படும்.
இச்சட்டத்தில் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதிலிருந்து அரசு தன்னை விலக்கிக் கொண்டு, உலக கார்ப்பரேட் முதலாளிகளிடம் இந்திய விவசாயிகளை அடகு வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய உணவுக்கழகம் இனி கொள்முதல் செய்ய இயலாத நிலையை உருவாக்கிவிட்டது. மேலும் இதனால் வருகிற 2021 பட்ஜெட் கூட்டத்தொடரில் கொள்முதலுக்கான நிதி முற்றிலும் கைவிடப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் பிரச்னையின் நியாயத்தை உணர மறுப்பதும், மறு பரிசீலனை செய்வதற்கு மறுப்பதும் இந்த விவகாரத்தை திசைத் திருப்ப முயற்சிப்பதாக உள்ளது.
ஏற்கனவே ”கிசான் கிரேடிட் கார்டு வழங்கி விவசாயிகளுக்கான சலுகைகளை வழங்குவோம்” என அறிவித்து வந்த மத்திய அரசாங்கம், மாநில அரசுகளிடம் நிலவுடமைப் பதிவேடுகளில் பதிவேற்றவில்லை எனக் கூறி எந்த ஒரு புள்ளி விவரமும் எங்களிடம் இல்லை என்று கைவிரித்து இருப்பது வெட்கக்கேடானது.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது குறித்த பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.
மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டத்தைக் கண்டித்து டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் சென்னை கோட்டையை நோக்கி பரப்புரை பயணம் மேற்கொள்ளோம்” எனக் கூறினார்.