திருவாரூர்: நன்னிலம் அருகே கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மணிகண்டன் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மணிகண்டன் தற்கொலைக்கு முழு காரணம் மாநில அரசு மட்டும்தான். மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் எவ்வளவு பயனாளிகள் வீடு கட்டி இருக்கிறார்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்களா என ஆய்வு செய்ய மாநில அரசுக்கு அக்கறை இல்லை,
இந்த குடும்பத்திற்கு மாநில அரசு உடனடியாக ஒரு கோடி இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, பாரதிய ஜனதா கட்சி ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுக்காவிலும் பாரத பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டத்தின் உள்ள அனைத்து பயனாளிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவோம்.
நேரடியாக நாங்கள் களம் இறங்கும் நேரம் வந்துவிட்டது, மாநில அரசை நம்பியோ அதிகாரிகளை நம்பியோ இன்னொரு உயிர் தமிழ்நாட்டில் போகக்கூடாது. இதுவே கடைசி உயிராக இருக்கட்டும். ஒரு வாரத்திற்குள் மாநில அரசு தலையிடும் என நம்பிக்கையில் இப்போது செல்கிறோம். இல்லை என்றால் போராட்டம் செய்து இழப்பீடு பெற்றுத் தருவோம்”என கூறினார்.
இதையும் படிங்க: கிராம மேற்பார்வையாளர் பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டுவதற்கு லஞ்சம் - இளைஞர் தற்கொலை