தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கி கடன், உற்பத்தியாளர்களுக்கு சுழல் நிதி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில உணவுத் துறை அமைச்சர் காமராஜ், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வங்கி கடன் மற்றும் சுழல் நிதிக்கான காசோலையை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், "வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்று திருத்தங்களினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. விவசாயிகளை பாதுகாக்கிற அரசாக அதிமுக இருக்கும். விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க ஏதுவாக, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். விவசாயிகளுக்கு எந்த பிரச்னை எற்பட்டாலும், அதற்கு எதிராக அதிமுக அரசு முதலில் குரல் கொடுக்கும்" என்றார்.