திருவாரூர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது உலகப் புகழ்பெற்ற தேர். அதற்கடுத்து நினைவுக்கு வருவது நீதிக்கு பேர்போன மனுநீதி சோழன். நீதிக்காக தன்னுடைய மகனையே தேரினால் ஏற்றி நீதி தவறாமல் தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டிய மனுநீதி சோழனின் நினைவாக திருவாரூர் மாவட்டம் பனகல் சாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நினைவு மண்டபம் நிறுவப்பட்டது.
நல்லரங்களை போதித்து, சீர்மிகு ஆட்சி புரிந்த இந்த நீதிமானின் நினைவு மண்டபம், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் தற்போது முறையான பராமரிப்பு இல்லாமல், நகராட்சி குப்பை வண்டிகளும் ,சாக்கடைகளும் நிரம்பி காட்சியளிக்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நினைவு மண்டபத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், மதுப்பிரியர்களின் கூடாரமாக இது செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் உள்ளே செல்வதற்கும் அச்சப்பட்டு வருவதாகவும் தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக மனுநீதி சோழன் நினைவு மண்டபத்தில் உள்ள நகராட்சியின் குப்பை வண்டிகள் மற்றும் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தி, பொதுமக்களின் அச்ச உணர்வைப் போக்கி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி, நினைவு மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு போல் புதுச்சேரி, கேரளாவில் தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை; கோரிக்கை வைக்கும் சீமான்