திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “திருவாரூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிக்காக ஆயிரத்து 461 காவல் துறையினர் உள்பட 11 ஆயிரம் நபர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். அவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தல் விதிமுறைகளை மீறி ஆறு வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. தற்போது வரை பணமோ, பொருளோ எதுவும் பறிமுதல்செய்யப்படவில்லை. தனிநபர்களின் வங்கிக்கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறி ஆன்லைன் மூலம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனைகள் நடைபெறுவதைக் கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது.
தனியார் நிதி நிறுவனங்கள் தேர்தல் தேதி எந்த ஒரு தொகையையும் மக்களுக்கு வழங்கக் கூடாது. மீறி கடன் வழங்கினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே நிலுவையில் உள்ள தொகையை மட்டும் மக்களிடம் வசூலிக்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் தங்களது திருமண நிகழ்வுகள், சுப நிகழ்ச்சிகளுக்குப் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லையென்றால் அப்பணம் பறிமுதல்செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி வாகன சேவை தொடக்கம்!