திருவாரூர் அருகேயுள்ள பவித்திரமாணிக்கம் திருவிக நகரில் குணசேகரன், ஜெயந்தி தம்பதியினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ரக்ஷிதா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். பவித்திரமாணிக்கத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ரக்ஷிதாவை குணசேகரன் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துள்ளார். ஆனால், ரக்ஷிதா தனது தந்தையிடம் திருவாரூரில் உள்ள நாகக்குடியில் செயல்பட்டுவரும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்பட்டுவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயில வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ரக்ஷிதாவின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய குணசேகரன் பிரதமர் மோடிக்கு 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது குழந்தையின் ஆசையை மின்னஞ்சலாக அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலுக்கு எந்தப் பதிலும் வராத நிலையில், மீண்டும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். மூன்றாவது முறையாக 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பிரதமர் மோடியிடமிருந்து பதில் வந்துள்ளது. இதில், குடும்பத்தினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
மாணவியின் ஆசையை நிறைவேற்றும்விதமாக கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்திற்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாணவியின் மாதந்திர கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததை ஏற்றுக்கொண்டு பள்ளி நிர்வாகம் மாணவி ரக்ஷிதாவை இரண்டாம் வகுப்பில் சேர்த்துக்கொண்டது.
தனது மகளின் ஆசையை நிறைவேற்றிய பிரதமர் மோடி மீது கொண்ட அன்பால் தனது மகளுக்கு மோடி ரக்ஷிதா எனப் பெயர் மாற்றியும், மோடியின் புகைப்படத்தை வீட்டின் பூஜையறையில் வைத்து வழிபட்டும் தனது நன்றியுணர்வை வெளிப்படுத்திவருகிறார் குணசேகரன்.
"எனது தந்தை கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து தற்காலிக ஊழியராகப் பணியாற்றிவருகிறார். எனது தாய் தையல் வேலை செய்துவருகிறார். எனது விருப்பத்தை தந்தையிடம் கூறியதையடுத்து தந்தையின் யோசனையின் பேரில் நான் பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.
அதுமட்டுமல்லாமல் கடிதம் மூலமாகவும் எனது ஆசையை தெரிவித்துவந்தேன். மின்னஞ்சல், கடிதம் அனுப்பிய இரண்டு மாதங்களுக்கு பின்பு பதில் மின்னஞ்சல் வந்ததைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பிரதமர் மோடிக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் போல் தமிழ்நாட்டில் ஏழைக்குடும்பங்களில் மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கும் பிரதமர் மோடி உதவ வேண்டும். எனது பள்ளி நிர்வாகத்தினர் மாதக்கட்டணம் செலுத்த தவறினால் என்னை வகுப்பறைக்கு வெளியே நிறுத்திவைத்து விடுகிறார்கள். பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தால் உள்ளே அனுமதிக்கிறார்கள். 12ஆம் வகுப்புவரை நான் கட்டணமின்றி பயில பிரதமர் மோடி உதவ வேண்டும்" என்கிறார் மாணவி ரக்ஷிதா.
பிரதமர் மோடியை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று விரும்பும் அவர், வருங்காலத்தில் வருமானவரித் துறை அலுவலராக வேண்டும் என்கிறார் மகிழ்ச்சியோடு.
இதையும் படிங்க: இயற்கை நாப்கின்கள் தயாரிப்பு: பள்ளி மாணவி அசத்தல்!