திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தோப்படி தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர்உசேன்(47). இவர் திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலுள்ள, அமைச்சுப் பணியாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சர்மிளா பானு அரசு உதவி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் சனிக்கிழமை அன்று, திருச்சியில் உள்ள உறவினர் இல்லத்திற்குச் சென்று, நேற்று அதிகாலை வீடு திரும்பிய போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 48 சவரன் நகையும், 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து திருத்துறைப்பூண்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.