புரெவி புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாள்களாகப் பெய்துவரும் தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதோடு நெற்பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருந்தரக்குடி, கல்யாண் மகாதேவி, எண்கண், முகுந்தனூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
ஒரு சில பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அமைச்சர் காமராஜ் அங்கு தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றும் பணிகளையும், வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதையும், பாதிப்புகளையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சாந்தா, கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர், அலுவலர்கள் உடன் சென்றனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், "இந்த ஆண்டு அனைத்து ஆறுகளும் தூர்வாரும் பணி, குடிமராமத்துப் பணிகளில் முழுமையாகத் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் எவ்வித தடையுமின்றி, ஆறுகளில் கடந்துசெல்கிறது.
வருகின்ற ஆண்டுகளில் தூர்வாரப்படாமல் உள்ள பகுதிகளைக் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக இவர்களுக்கு 168 முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன. மாவட்டம் முழுவதும் 72 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இதுவரை கணக்கெடுப்பின்படி பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை ஆயிரத்து 111, மேலும் தொடர் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.