திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதை சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித் துறை அலுவலரான இவர், திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் உள்ள இந்தியன், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் உள்ள லாக்கர்களில் தனது நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி வங்கிக்குச் சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அவர் மீது இருசக்கர வாகனம் கொண்டு விபத்து ஏற்படுத்தியுள்ளனர்.
இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த நகை பையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணாமூர்த்தி திருத்துறைபூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே வங்கிகளில் இருந்து பணம் எடுத்து வருவபர்களை நோட்டமிட்டு தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் உடனடியாக குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறையினர் நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: