திருநெல்வேலி: தூத்துக்குடி முத்தாலங்குறிச்சி சேர்ந்த எழுத்தாளர் காமராசு, 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அநத மனுவில், "திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் நதிக்கரைகளில் வரலாற்று சிறப்புமிக்க கல் மண்டபங்கள், படித்துறைகள் ஆகியவை ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 5ஆம் தேதி இந்த மனு குறித்து விசாரனையில் ஆஜரான நெல்லை மாநகராட்சி ஆணையர் சுக புத்ரா, "மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வெளியேறும் கழிவு நீரை தாமிரபரணி ஆற்றில் கலப்பதை தடுக்கும் பணிகளை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகின்றோம். இரண்டாவது கட்ட பணிகள் டிசம்பர் மாதம் நிறைவடையும். மூன்றாவது கட்டப்பணிகள் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும். அதன்பிறகு நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர், தாமிரபரணி ஆற்றில் நேரிடையாக கலக்காது,” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகள்...10ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நேரில் ஆய்வு!
இதனையடுத்து, “இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே முக்கியம். எனவே, இன்று நவம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை நீதிபதிகள் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர், தாமிரபரணியில் கலக்கும் பகுதிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளோம்,” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று (நவ.10) திருநெல்வேலி மாநகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில், தாமிரபரணியில் கழிவு நீர் கலக்காமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஆற்றின் தற்போதைய நிலை உள்ளிட்டவைகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி மற்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் மீனாட்சிபுரம் தாமிரபரணி நதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆய்வின்போது கழிவு நீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்குவதற்கு மாநகராட்சி பொறியாளர் எங்கே? என்று நீதிபதிகள் ஆணையரிடம் கடிந்து கொண்டுள்ளனர். மேலும், தற்போது கழிவுநீர் கலப்பதை தடுக்க செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் முழுவதும் தேவையற்றது என தீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இரண்டு ஆண்டுகளாகும் என மனகராட்சி நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், அதுவரை ஆற்றில் கழிவீர் கலப்பதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என நீதிபதிகள் ஆணையரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், யாரை ஏமாற்றுவதற்கு இது போன்ற பணிகளில் ஈடுபடுகிறீர்கள். இந்த திட்டம் முறையாக செயல்பட அமைத்ததை போல் தெரியவில்லை. ரூ. 35 ஆயிரம் மதிப்பில் தற்காலிக சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டும் எந்த பலனும் அளிக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையும் வரை எந்த முறையில் கழிவு நீர் சுத்திகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த ஆய்வில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா, வருவாய் அலுவலர் சுகன்யா, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் இளையராஜா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்