ஐதராபாத்: அண்மைக் காலமாக விராட் கோலியின் விளையாட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு முறை மட்டுமே அவர் அரைசதம் அடித்தது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் இந்தியாவின் ரன் மெஷின் என அழைக்கப்பட்ட விராட் கோலி தற்போது அனைவராலும் எள்ளி நகையாடப்படுகிறார்.
சச்சினுக்கு அடுத்தபடியாக பல்வேறு சாதனைகளை முறியடித்த ஒரே நாயகன் என்றா அது விராட் கோலி தான். அப்படி விராட் கோலியின் எளிதில் முறியடிக்க முடியாத சாதனைகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
அதிக ஒருநாள் சதம்:
50 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் விராட் கோலி (50 சதம்) அதிக சதம் அடித்து சச்சின் தெண்டுல்கரின் (49 சதம்) சாதனையை முறியடித்துள்ளார். டி20 போட்டிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நேரத்தில், குறைவான ஒருநாள் தொடர்களே நடத்தப்படும் இந்த காலகட்டத்தில் ஒரு வீரர் 50 சதங்கள் அடிப்பது மிகவும் கடினமானது.
வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்:
விராட் கோலி கேப்டனாக வகித்த காலக்கட்டத்தில் இந்திய அணி 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 40ல் வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி அறியப்படுகிறார். உலக அளவில் விராட் கோலி உள்பட மொத்தம் 3 கேப்டன்களே இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளனர்.
அதிவேக ஒருநாள் கிரிக்கெட் ரன்கள்:
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம், 12 ஆயிரம் மற்றும் 13 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்னகத்தே வைத்துள்ளார்.
தொடர் நாயகன் விருதிலும் முத்திரை:
அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற சச்சின் தெண்டுல்கரை (20 விருது) பின்னுக்குத் தள்ளி விராட் கோலி 21 விருதுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் 4 விருதுகள் குறைவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஒரு அணிக்கு எதிரான அதிக சதங்கள்:
ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த ஒரே வீரர் விராட் கோலி தான். இலங்கைக்கு எதிராக விராட் கோலி 10 சதங்கள் விளாசி உள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 9 சதங்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 சதங்களையும் விராட் கோலி அடித்துள்ளார்.
உலக கோப்பையில் அதிக ரன்கள்:
ஒரு உலக கோப்பை சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலி வசமே உள்ளது. 2003 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் தெண்டுல்கர் அதிகபட்சமாக 673 ரன்கள் அடித்து இருந்தார். ஆனால் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் அந்த சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
அதிக டெஸ்ட் சீரிஸ் ரன்கள்:
டெஸ்ட் தொடர்களில் அதிக முறை 600க்கு மேற்பட்ட ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். அவர் அதிகபட்சமாக 3 முறை 600க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார். டான் பிராட்மேனுக்கு (6 முறை) அடுத்தபடியாக வெறும் 4 பேர் மட்டுமே இந்த மைல்கல்லை படைத்துள்ளனர்.
அதிக முறை ஐசிசி தொடர் நாயகன் விருது:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற சாதனையும் விராட் கோலியிடமே உள்ளது. அவர் 2014 மற்றும் 2016 டி20 உலக கோப்பையிலும், 2023 ஒருநாள் உலக கோப்பையிலும் தொடர் நாயகன் விருது வென்று உள்ளார். மற்ற எந்த வீரர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Champions Trophy 2025: "பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை..." ஐசிசியிடம் பிசிசிஐ முறையீடு எனத் தகவல்!