உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் -19 பெருந்தொற்று இந்தியாவில் தீவிரமாகி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் அந்த காரணமாக 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் -19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
தமிழ்நாட்டில் வைரஸ் பெருந்தொற்று 2ஆம் நிலையை அடைந்து தீவிரமடைந்துவருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது. இதனால் வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதிவரை முழுமையான ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பு நடவடிக்கையால் அடித்தட்டு மக்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரும் நடந்தே தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலும் தொழில்துறை, வேளாண்துறை கூலித் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருவாரூர் அருகே உள்ள அழகிரி காலனியில் ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் கடும் சிரமம் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பகுதி மக்களை காவல்துறையினர் ஒரு கரும்புள்ளியாகவே பார்த்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் வெளியில் சென்று அத்தியாவசிய பொருட்களான காய்கறி மளிகை பொருட்கள் வாங்க சென்றாலே தடியடி நடத்துகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “நாங்கள் அன்றாடம் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருபவர்கள். எங்களுக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. எங்களிடம் பணமும் இல்லை. நாங்கள் என்ன சாப்பிட வேண்டும்? கரோனா வைரஸ் வந்து எங்களை தாக்கி இறப்பதற்கு முன் ‘பசியால்’ நாங்கள் அனைவரும் மடிந்து விடுவோம். மற்ற பகுதிகளுக்கு சில தொண்டு நிறுவனங்கள் அத்தியாவசிய பொருள்களை வழங்கி வரும் நிலையில், எங்களுக்கு இதுவரை யாரும் வழங்க முன்வரவில்லை. மாவட்ட நிர்வாகமும் வழங்கவில்லை.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு 14ஆம் தேதி வரை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல் எத்தனை நாள்கள் நாங்கள் தவிப்பது. இங்குள்ள பெரியவர்களை கூட விடுங்கள். நாங்கள் கூட பசியைத் தாங்கிக் கொள்வோம். ஆனால் எங்களுடைய குழந்தைகள் பசி தாங்க மாட்டார்கள். அவர்களுக்காவது இந்த அரசு உதவ வேண்டும். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்கள் பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டிற்கு காய்கறி வாகனங்கள் செல்ல கர்நாடக ஆட்சியர் உத்தரவு!