திருவாரூர்: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு (அக். 11) திருவாரூர் மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்துவந்தது.
இந்த கனமழையால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேவுள்ள அதம்பாவூர், ஜெகநாதபுரம், நெய்மேலி, குப்பம், கம்மங்குடி, வடகுடி உள்ளிட்ட கிராமங்களிலுள்ள வடிகால் வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால் சம்பா சாகுபடியான நேரடி நெல் விதைப்பு செய்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலம் நீரில் மூழ்கி நாசமடைந்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுவரை அரசு அலுவலர்கள் வந்து பார்வையிடவில்லை என உழவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே உழவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு உடனடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆயுத பூஜை சீஷன்: சாம்பல் பூசணி பெருமளவு ஏற்றுமதி; விவசாயிகள் மகிழ்ச்சி