திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள ஜீவானந்தம் தெருவைச் சேர்ந்தவர் வசந்த ராஜ். இவர், ஐடிஐ முடித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக உணவகத்தில் வேலைசெய்துவந்தார்.நேற்று காலை வெளியே சென்ற வசந்த ராஜ் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர், வசந்த ராஜின் நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் புதிதாக கட்டிவரும் வீட்டில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கிலிடப்பட்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த செங்கம் காவல் துறையினர், உடலை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் செங்கம் பகுதியைச் சேர்ந்த ஜோதி பிரகாஷ் என்பவரது மகன் வசந்த ராஜ் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, வசந்தராஜ் தானாக தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யபட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பார்க்க: பணத்தை ஏழைகள் கையில் கொடுங்கள் - நோபல் பரிசு வென்ற எஸ்தர் டஃப்லோ