திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே செஞ்சியை சேர்ந்த சுரேந்தர் என்பவர் மகாலட்சுமி ஐயங்கார் பேக்கரி நடத்திவருகிறார். நேற்று (ஏப்ரல் 15) மாலை, இந்த பேக்கரிக்கு சில இளைஞர்கள் வந்தனர். அவர்கள் அங்கு டீ, பிஸ்கட், குளிர்பானம், ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர்.
அதன்பின், இளைஞர்களிடம் சாப்பிட்ட பொருள்களுக்கான பணத்தை பேக்கரி ஊழியர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் கடையில் பணிபுரியும் டீ மாஸ்டரையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதைப்பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் பயத்தில் உறைந்துபோயினர். அதன் பின் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக கடையின் மேலாளர் ஆரணி காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பேக்கரியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பிசென்றவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.