திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அடுத்த தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மகேந்திரன். இவரது மனைவி தீபா மற்றும் மகள் காவியா ஆவர். இந்நிலையில், மகள் காவியா சேத்துப்பட்டு பழம் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த காவியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து காவியாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து உடற்கூராய்வு முடிவுற்ற நிலையில், நேற்று (செப்.24) பகல் ஒரு மணியளவில் காவியாவின் உடல், தத்தனூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர், வீட்டின் எதிரே காவியாவின் உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் உறவினர்கள் வந்து காவியாவின் உடல் மீது மாலை அணிவித்து பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். மேலும், குளிர்சாதனப் பெட்டியை சுற்றி பெண்கள் கூட்டமாக சேர்ந்து துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு.. கனமழையால் நேர்ந்த சோகம்..
அப்போது, குளிர்சாதன பெட்டியில் இருந்து திடீரென மின்சாரம் தாக்கியதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் தூக்கி வீசப்பட்டு, மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, உடனே அப்பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர், மின்சாரம் தாக்கிய உறவினர்கள் தனுசு, சுஜாதா, சுமதி, முருகம்மா, மணிமேகலை, காமாட்சி, சித்ரா, திவ்யா, சாமுண்டீஸ்வரி, ராஜகுமாரி, சிவசக்தி, கலைச்செல்வி, உமா, மல்லிகா, லட்சுமி ஆகிய 15 பேரும், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும், துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் மின்சாரம் தாக்கிய சம்பவம், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: விற்பனைக்காக 31 கிலோ சந்தன கட்டைகளை கடத்திய முதியவர்!…வனத்துறையினர் நடவடிக்கை