திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி குபேரன் நகர் 2ஆவது தெருவில் அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியினர் பலரும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊராட்சி சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக டெண்டர் விடப்பட்டது.
அதன்படி ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது, குபேரன் நகரைச் சேர்ந்த பெண்கள் சிலர் ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். தாழ்வான பகுதியில் கால்வாய் அமைக்காமல் மேடான பகுதியில் கால்வாய் அமைத்தால், கழிவு நீர் வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படுவதாக அப்பெண்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, தாழ்வான பகுதியில் வசிக்கும் பெண்கள், ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்த பெண்களுடன் வாக்குவாதம் செய்தனர். முற்றிய வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மூன்று மாதங்களுக்கு முன்பு கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டபோது தெருவின் இரண்டு பக்கங்களும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பின்னர் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்க அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அளவிடும் பணிகள் நடைபெறாமல் மீண்டும் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கியதால் இப்பிரச்னை கைகலப்பு வரை சென்றுள்ளது.
இதையும் படிங்க: உங்க நண்பருக்கு எப்போ வரவேற்பு: மோடியை விமர்சித்த ப.சிதம்பரம்